Categories
News

மறைக்கப்பட்ட பக்கங்கள் (நூல் அறிமுக மற்றும் விமர்சன நிகழ்வு)

Designed by Prof. Dr. Prabhakar Vedamanikam, The American College
கலைடாஸ்கோப்பில் நேற்று மாலை கோபிசங்கரின் “மறைக்கப்பட்ட பக்கங்கள்: பால், பாலினம்,பால் ஒருங்கிணைவு” நூல் அறிமுகம் நடை பெற்றது. தமிழ் மொழியில் பால்புதுமையினர் பற்றி பேசும் முதல் நூல் இது.
பால்புதுமையினர் சார்ந்தும், ஓர் பால் ஈர்ப்பு பற்றிய தெளிவான பார்வையும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நூல். வரலாற்றெங்கிலும் காணப்படும் தரவுகளையும், தொன்மங்களையும் மீள்பார்வைக்கு உட்படுத்துகிறார் கோபி சங்கர்.
நிறுவன சமயங்களின் நெருக்கடி எவ்வாறு இயல்பான இயற்கையான பாலினங்கள் மற்றும் பால் ஈர்ப்பு மீது தாக்கத்தை ஏற்படுத்தியது என்றும் மேலை நாடுகள் முன்னெடுத்து தீர்வு கண்ட போராட்டங்களையும் வரிசைப்படுத்துகிறார்.
அடித்தளமக்கள் ஆய்வுகளின் தொடர்ச்சியாக இந்நூல் தமிழில் முதலில் வெளி வந்துள்ளது சிறப்பு.
தொடர்ந்து நடைப்பெற்ற உரையாடல் இன்னும் தீவிரமாக இருந்தது. வழக்கத்தை விட அதிக பார்வையாளர்கள் கலந்துக்கொண்டர்.
பாலின அடிப்படையிலான அடித்தள மக்களின் உரிமைகளை கோருவதிலும், போராட்டங்களை முன்னெடுப்பதிலும் கோபி சங்கர் சிறந்த முன்னுதாரணமாக கருதுகிறேன்
இந்நூல் அமெரிக்கன் கல்லூரி பாடவரைவுதிட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. – கார்த்தி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 
——————————
நேற்று கலைடாஸ்கோப்பில் ‘மறைக்கப்பட்ட பக்கங்கள்’ எனும் புத்தகம் எழுதியிருக்கும் கோபி சங்கருடன் ஒரு சந்திப்பு. அமெரிக்கன் கல்லூரியின் எந்நாளும் மாணவரான தன்னைப் பாலியல் மறுப்பாளன் என்று அழைத்துக் கொள்கிறார், கோபி. மூன்றாம் பாலினம் என்ற சொல்லே தவறு என்றும், 58 வகையான பாலியல் மாற்றுகள் இருப்பதாகவும் சொன்னார். குடும்பங்களில் பாலியல் சுதந்திரத்தின் மீதான ஒடுக்குமுறை, மாலிக்காபூர் காலம், ஔரங்கசீப் காலம், மதுரை மீனாட்சியின் மூன்று தனங்கள், ‘ பேடி’ என்ற சொல்லின் வேர், தடகள வீராங்கனை சாந்திக்காக சர்வதேச நீதிமன்றங்களில் நடத்திய போராட்டங்கள், எழுத்தாளர் அருந்ததி ராயுடனான முரண்பாடு… என்று பல விஷயங்களை தூய தமிழில் husky voice ல் அழகாக எடுத்துரைத்தார். பொதுவெளியில் பலர் குறிப்பாகப் பாலின மறுப்பாளர்களே பேசத் தயங்குகிற, பேச மறுக்கிற பல விஷயங்களைப் பேசினார். நாடு முழுவதும் இருக்கும் இம் மாதிரியான சமூகங்களை அவற்றின் வாழ்வியல் முறைகளை விரிவாகவும் தெளிவாகவும் சொன்னார். சிருஷ்டி அமைப்பின் மூலம் இவ்வகை நபர்களுக்கு உதவி வருவதாகவும் குறிப்பிட்டார். – Suresh Kathan, Madurai
—————————–
சென்னை புத்தகத் திருவிழா நாளையுடன் நிறைவு பெறுகிறது. இப்புத்தகக் காட்சியின் சிறந்த வெளியீடாக நான் கருதும் ஒரு புத்தகத்தை நண்பர்களுக்கு அறியப்படுத்த விரும்புகிறேன். அது, கோபி சங்கர் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பித்திருக்கும் “மறைக்கப்பட்ட பக்கங்கள்: பால்.பாலினம்.பாலியல் ஒருங்கிணைவு” என்ற புத்தகம்.
பால், பாலினங்கள் தொடர்ப்பான புரிதல்கள் நமக்கு குறைவு என்பதை விட அறவேயில்லை என்பதே உண்மை. மையப்படுத்தப்பட்ட பாலினங்களான ஆண், பெண் என்பவைகளோடு இவ்வுலகில் ஐம்பதிற்கும் அதிகமான பாலினங்கள் இருக்கின்றன. வரலாற்றுடனான அவர்களின் தொடர்பிலிருந்து நிகழ்காலத்தில் அவர்களின் இருப்பு, மறுக்கப்படும் அங்கீகாரங்கள், எதிர்க்கொள்ளும் துயரங்கள், சவால்கள் வரை இந்நூலில் கோபி சங்கர் எழுதியிருக்கிறார்.
இதுவரை நாம் அறியாத ஒரு விடயத்தை பேசுப் பொருளாகக் கொண்டிருக்கும் காரணத்தினால் இப்புத்தகம் சிறப்படைகிறது என்றாலும் அதன் சிறப்பை மேலும் கூட்டுகின்ற மற்றொரு காரணமும் இருக்கின்றது. அது இந்நூலின் ஆசிரியர் கோபி சங்கர் பற்றியது. கோபி சங்கர் ஓர் இண்டர்செக்ஸ் நபர். பிறக்கும் போது பிறப்புறுப்பு தெளிவில்லாமலோ அல்லது இடைப்பட்ட நிலையிலோ பிறக்கும் குழந்தைகளை இடையிலிங்கத்தவர்கள் (இண்டர்செக்ஸ்) என்கிறார்கள்.
யாரோவொருவர் இச்சிறுபான்மை சமூகத்தைப் பற்றி எழுதுவதைக் காட்டிலும் அச்சமூகத்திலிருந்து வரும் ஒருவர் எழுதுகையில் அது கூடுதல் முக்கியத்துவமும், அசல்தன்மையுடன் அதன் உள்ளடக்கங்களும் வீரியம் பெறுகின்றன.
எழுத்தாளர் மருதன் இப்புத்தகத்தை பற்றி எழுதியிருக்கும் குறிப்பை இதனுடன் இணைக்கிறேன். – சுந்தர் காந்தி, சென்னை
——————————————
பால்-பாலினம்-பாலியல் ஒருங்கிணைவு (Sex-Gender-Sexual Orientation) பற்றிய நூல் ஒன்று
‘மறைக்கப்பட்ட பக்கங்கள்’ என்ற பெயரில் தமிழில் வெளிவந்துள்ளது. அரவாணிகள் அல்லது மூன்றாம் பாலினம் பற்றிய ஆக்கபூர்வமான உரையாடல்கள் தமிழகத்தில் கடந்த பத்து வருடங்களுக்குள்ளாகத்தான் தொடங்கியுள்ள சூழலில் இந்நூல் பாலினங்கள் பற்றிய புரிதலை அதிகரித்துள்ளது ( பலரைக் கூடுதலான குழப்பங்களுக்கும் ஆளாக்கக்கூடும்). ஆண், பெண் மற்றும் திருநங்கை, திருநம்பி எனும் மூன்று பாலினத்தவர் தவிர்த்து மேலும் 25 க்கும் மேற்பட்ட பாலினங்கள் உண்டு என்பதையும் அது தொடர்பான ஆய்வுகள் மேற்கத்தைய கல்விப்புலங்களில் ‘Gender Queer’ என்ற பகுப்பின் கீழ் நடந்துவருவதையும், சுட்டுகிறது. இந்தியாவில்(ஆங்கிலம் தவிர்த்து) தமிழில்தான் இது தொடர்பான முதல்நூல் வெளிவருவதும் இது தொடர்பான கலைச்சொற்கள் தமிழில் உருவாக்கப்பட்டுள்ளமையும் கூடுதல் தகவல்களாகும். (Gender Queer – பால் புதுமையினர்) மூன்றாம் பாலினத்தவரைக் குடிமக்களாக அங்கீகரித்து ரேஷன் அட்டைகள் வழங்கியதில் தமிழகம் இந்தியாவிற்கே முன்னோடியல்லவா?
மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அங்கீகாரம் சாத்தியமாகியுள்ள சூழலில், அந்த மூன்றாம் வகைக்குள்ளும் தங்களைப் பொருத்திக்கொள்ள இயலாமல் அடையாளக்குழப்பத்தில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை கணிசமானது என்கிறார் நூலாசிரியர். பாலுறுப்புக்குழப்பங்களுடன் பிறக்கும் குழந்தைகளைக் கையாள்வதில் பெற்றோர்களோடு மருத்துவர்களுக்கும் கூட சரியான புரிதல் இருப்பதில்லை. ஆண் பெண் இருவருக்குமான உடலியல் அம்சங்களோடு பிறக்கும் அத்தகைய குழந்தைகள் ‘இடையிலிங்கத்தவர்’ (Intersex) என்று வகைப்படுத்தப்படுகிறார்கள். திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 1986 தொடங்கி 5ஆண்டுகளில் 35 குழந்தைகள் இடையிலிங்கத் தன்மையுடையனவாக அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால் இந்தியா முழுமைக்குமான இத்தகைய குழந்தைகள் பற்றிய விபரங்கள் சேகரிக்கப்படவில்லை. உத்தேசமாக இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 10000த்திற்கும் மேல் இத்தகைய குழந்தைகள் பிறந்த சிலமணி நேரங்களுக்குள் ‘செக்ஸ் செலக்டிவ் சர்ஜரி’ எனும் கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்களாம். இதுபோலவே பல்வேறு பாலின வகைமைகளை அறிமுகப்படுத்தி, அவர்கள் பற்றிய புரிதலை மேம்படுத்தி அவர்களை இயல்பாக வாழ அனுமதிக்கவேண்டும் என்பதே இந்நூலின் ஆதார நோக்கமாக அமைகிறது.
ஆண், பெண் மற்றும் பிற பாலினத்தவருள் ஒருவர்… ஆக மூன்று பாலினங்களையும் ஒருங்கே கொண்டவர் – திரிநர் (Tri- gender)
எந்த ஒரு பாலினத்தையும் உணராதவர் – பாலிலி (A-gender)
அனைத்துப் பாலினங்களின் கூறுகளையும் கொண்டவராக அடையாளப்படுத்திக்கொள்பவர் – முழுநர் (Pan-gender)
இவ்வாறு 30 பாலினங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ள விபரம் நமக்குக் கொஞ்சம் அதிர்ச்சியானதுதான். ஹார்மோன்களின் விசித்திரச்சேர்க்கைகளின் விளைவுகள் தொடர்பான அறிவியல் பூர்வமான விபரங்கள் ஒருபுறம், கிரேக்க, இந்திய புராண இதிகாசச் சான்றாதாரங்கள் ஒருபுறம், சமகால சர்ச்சைகள், புள்ளிவிபரங்கள், உலகளவிலான சட்டங்கள் என பல்வேறு திசைகளிலும் பயணம் செய்கிறார் நூலாசிரியர்.
மூன்று மார்புகளோடு தோன்றிய மதுரை மீனாட்சி தொடங்கி சீயஸ், சாக்ரடீஸ், அலெக்சாண்டர், ஹிட்லர் என விரியும் சான்றுகள் இந்நூலுக்குப் பின்னுள்ள உழைப்பைக் காட்டுகிறது. நிறைய அதிர்ச்சிகள், தகவல்கள், சர்ச்சைகள், வினாக்கள் மற்றும் சுவாரஸ்யங்களையும் கொண்ட நூல் இது.
தன்னை இடையிலிங்க (Intersex) பாலின வகைமையைச் சார்ந்தவராக அடையாளப் படுத்திக் கொள்ளும் இந்நூலாசிரியர் கோபி ஷங்கர் இருபதுகளைத் தாண்டாதவர். 10ஆண்டுகளுக்குமேல் இராமகிருஷ்ண மடத்தில் துறவியாக இருந்து / இருக்க முயன்று வெளிவந்தவர். அமெரிக்கன் கல்லூரியில் ‘சமயம், தத்துவம் மற்றும் சமூகவியல்’ துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். பாலினச் சிறுபாண்மையினரின் உரிமைகளுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு செயலாற்றி வருபவர்.
எங்கள் முதுகலை பாடத்திட்டத்தில் ‘தற்கால இலக்கியம்: அண்மைப் போக்குகள்’ எனும் பாடத்தில் ஏற்கனவே உள்ள ‘மூன்றாம் பாலின இலக்கியம்’ என்பதை ‘மூன்றாம் பாலினம் மற்றும் பால் புதுமையினர் இலக்கியம்’ என்று விரிவு படுத்தியுள்ளமைக்கு இந்நூல் ஒரு காரணம். இந்நூல்
பாடநூலாகவும் இணைக்கப்பட்டுள்ளது.
அடுத்த தலைமுறைக்கு பாலினச்சிறுபாண்மையினர் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டியது மிக அவசியமெனக் கருதுவோர் கையிலிருக்கவேண்டிய நூல்.
நூல்- கிழக்கு வெளியீடு / 296 பக்கங்கள் / 250 ரூபாய் – 

பேராசிரியர் பிரபாகர் வேதமாணிக்கம், தமிழ் துறை, தி அமெரிக்கன் கல்லூரி, மதுரை Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s