Categories
News

சுழியர் (Asexuals)

இப்போதெல்லாம் சாக்லேட் முதல் சகல விளம்பரங்களுமே பால் உணர்வை தூண்டும் விதமாகவே விளம்பரமாக்கப்படுவதை நாம் காணமுடிகிறது. குளிர்பானம் விளம்பரமாக இருந்தால்கூட அதை கவர்ச்சியோடு ஒரு மாடல் உதட்டை சுழித்து சொன்னால்தான் அந்த விளம்பரம் மக்களை சென்றடைகிறது. இதற்கு பின்னால் ஒரு உளவியல் ரீதியான காரணமே உண்டு. நம் ஒவ்வொருவருமே எப்போதும் காமத்தின் மீதும், கிளர்ச்சியின் மீதும் நம்மை அறியாமல் ஒரு ஈர்ப்போடு இருக்கிறோம். அது ஆண் மீதோ, பெண் மீதோ, திருநர் மீதோ எந்த வகையிலாவது நம் ஈர்ப்பு இருக்கிறது. ஆனால், அப்படி பால் ரீதியான கிளர்ச்சியும் ஈர்ப்பும் இல்லாமல் சிலர் இருக்கிறார்கள் என்று சொன்னால், அதை நம்ப கடினமாகத்தான் இருக்கும். ஆனால், அதுதான் உண்மை. அப்படி பால் ஈர்ப்பு இல்லாத நபர்களுக்கு பெயர் சுழியர் (asexual).அவர்களுக்கு இயல்பாகவே அத்தகைய விருப்பம் உண்டாவதில்லை என்கிறது அறிவியல்.  “ஒரு நபருக்கு பால் ரீதியான கிளர்ச்சியோ ஈர்ப்போ வராவிட்டால் அவர்கள் சுழியர் எனப்படுவர்” என்று asexual வார்த்தைக்கு விளக்கம் கொடுக்கிறது AVEN, (the Asexuality Visibility and Education Network) என்கிற அமைப்பு. இந்த வித்தியாசமான விஷயத்தை தனக்குள் உணர்ந்த அலெக்சிஸ் கரினின் (Alexis Karinin) என்பவர் , “முதலில் நான் பால் ஈர்ப்பு இல்லாததை உணர்ந்து ரொம்பவே பயந்தேன், நான் தனித்து விடப்பட்டதை போல உணர்ந்தேன். மன ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டேன். பின்பு, நான் இயல்பாகத்தான் இருக்கேன், ஆனால் கொஞ்சம் வித்தியாசமான இயல்பு இது அவ்வளவுதான் என்பதை புரிந்துகொண்டேன் . இப்போ நான் என்னையும், என் இயல்பையும் தெளிவா புரிந்துகொண்டேன்” என்கிறார். பின்பு இவர் தன்னைப்போல எண்ணம் கொண்ட பலர் இருப்பதை இணையம் வழி கண்டுபிடித்தார், தனக்கு இருக்கும் அத்தனை உணர்வுகளும் அவர்களுக்கும் இருப்பதை உணர்ந்தார். AVENஇன் இணைப்பில் உள்ள இத்தகைய நபர்களின் உணர்வுகளை பொதுவாக வரையறுக்க முடியவில்லை. சிலருக்கு உடல் மற்றும் உணர்வு ரீதியாக என்று எதிலுமே பாலியல் நாட்டமில்லை, சிலருக்கோ உணர்வு ரீதியாக அன்பு மற்றும் காதல் தேவைப்படுகிறது, என்றாலும் உடல் ரீதியான உறவு பிடிக்கவில்லை. சிலரோ சூழ்நிலைகளால் மற்றும் அடுத்தவர்களுக்காக உடல் உறவுகளில் தாங்களாக விருப்பத்தை ஏற்படுத்திக்கொண்டு ஈடுபடுகிறார்கள்.
சிலர் சுய இன்பத்தில் விருப்பம் கொள்கிறார்கள், சிலர் காதல் உறவை மட்டும் விரும்புகிறார்கள், சிலர் அவ்வப்போது சூழ்நிலையால் உறவு கொள்கிறார்கள் என்று இந்த சிறிய உலகத்தின் உள்ளும் கூட பல மாறுபாடுகள் உண்டு. ஆனால், இத்தகைய ஒரு விஷயம் பிறப்பால் ஏற்படுவதில்லை என்றும், அதற்கு காரணமாக குழந்தையாக இருக்கும்போது பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆட்பட்டது, ஏதோ ஒரு விபத்து, சரியான பிடித்த நபர் கிடைக்காதது போன்றவற்றை குறிப்பிடுகிறார்கள் AVENக்கு எதிராக குரல் கொடுக்கும் நபர்கள்.



ஆனால் இதை பற்றிய பல முரண்பாடுகள் இருந்தாலும், அறுபது வருடங்களுக்கு முன்பு இதை அறிவியல் ரீதியாக அங்கீகரித்தவர் ஆல்ப்ரட் கின்சே. 1948ஆம் ஆண்டு மனித பாலியல் விருப்பம் தொடர்பான ஆய்வில் இதை தெரிவித்துள்ளார் கின்சே. அத்தகைய பால் ரீதியான விருப்பம் இல்லாத நபர்களை இவர் க்ரூப் “X” (group X) என்று கூறுகிறார். கின்சே ஆய்வு செய்த நபர்களில் 1.5% வாலிப ஆண்கள், 14-19% திருமணம் ஆகாத பெண்கள் மற்றும் 1-3% திருமணம் ஆன பெண்கள் இத்தகைய க்ரூப் X பிரிவில் சுழியர்களாக வரையறுக்க படுவதாக கூறுகிறார். எயிட்ஸ் தொடர்பாக 1994 ஆம் ஆண்டு ஒரு சர்வே எடுக்கப்பட்டது. 18,876 பொதுமக்களிடம் எடுத்த அந்த ஆய்வின் முடிவு ஒரு அதிசயமான உண்மையை வெளிக்கொண்டு வந்தது. அதாவது, சர்வே எடுக்கப்பட்ட மக்களில் 1.05% மக்கள் பால் சார்ந்த ஈர்ப்பு தங்களுக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். கின்சே கூறியபடி சுழியர் பிரிவினர் அமெரிக்காவின் ஒரு சதவிகிதத்திற்கு மேல் இருப்பதை யாவரும் அதிசயமாகவே பார்த்தனர். பின்னர் AVEN அமைப்பின் டேவிட் ஜே என்பவர், இது தொடர்பான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் கொண்டுவரவேண்டும் என்றும், சமூகம் இத்தகைய விஷயத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றும் கூறுகிறார். இதன்மூலம் சமூகத்தில் தங்களை வெளிக்காட்டி கொள்ளாத பால் விருப்பம் இல்லாத நபர்கள் வெளிவர வாய்ப்பு உள்ளதாகவும், அதன்மூலம் இந்த சதவிகிதங்கள் அதிகரிக்கும் என்றும் கூறுகிறார்.
AVEN அமைப்பின் அலெக்சிஸ், “சுழியர்களை சமூகம் புறக்கணிக்கும் நிலை மாறவேண்டும். ஓரின விருப்பம் கொண்டவர்களை விட அதிக சமூக புறக்கணிப்பையும், மன பாதிப்பையும் இத்தகைய மக்கள் அடைவதாக கூறுகிறார். இத்தகைய நபர்களை மனப்பக்குவம் இல்லாதவர்களை போலவும், மன நோய் உள்ளவர்களை போலவும் பார்ப்பதை மக்கள் நிறுத்த வேண்டும் என்றும் கூறுகிறார்”.

பால் சார்ந்த விருப்பம் இல்லை என்று நான் சொன்னதும் பலர், நான் உடலுறவிற்கே எதிரானவள் என்றும் மதம் மற்றும் கொள்கை ரீதியான பாலியல் விருப்பம் அற்றவள் போலவும் நினைக்கிறார்கள். நிச்சயமாக நான் உடலுறவிற்கு எதிரானவள் இல்லை. உடலுறவு கோட்பாட்டை நான் ஏற்றுக்கொள்கிறேன், அதே நேரத்தில் தனிப்பட்ட முறையில் எனக்கு அதில் விருப்பமில்லை. தனி மனித விருப்பம் என்ற விஷயத்தில் மட்டுமே நாம் இதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்என்று அலெக்சிஸ் தன் பால் விருப்பம் தொடர்பான கருத்தை முன்வைக்கிறார்.

ஆனால், அலெக்சிஸ் சொல்லும் ஒரு விஷயம் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. இத்தகைய சுழியர் பிரிவு மனிதர்களுக்கு சில LGBTQ அமைப்புகள் ஆதரவாக குரல் கொடுக்கிறார்கள். அதே நேரத்தில் தங்கள் பாலியல் விருப்பத்தை வைத்து பிரிக்கப்படும் LGBTQ வகைக்குள் எங்களை போன்ற பால் ஈர்ப்பில் விருப்பம் இல்லாத நபர்களை இணைக்க வேண்டாம். நாங்கள் ஸ்ட்ரைட் நபர்கள்தான், எங்களுக்கு உடல் சார்ந்த உறவுகளில் விருப்பம் இல்லை, அவ்வளவேஎன்று மாற்றுப்பாலினம் பிரிவினரிடமிருந்து தங்களை வித்தியாசப்படுத்த முனைகிறார்.
“ஒரு பக்கம் இனிப்பும், மறுபக்கம் உடலுறவும் வைத்து , ஒன்றை தேர்ந்தெடுக்க சொன்னால், இனிப்பைத்தான் தேர்ந்தெடுப்போம்” என்கிறார்கள் இந்த AVEN அமைப்பினர்.  இது நகைச்சுவையாக இருந்தாலும், அவர்களின் உண்மை மனநிலை கூட அதுதான். இவர்களுக்குள் உள்ள இணைய வழி தொடர்பு மூலம் தங்களுக்குள் சந்திப்புகள், காதல் மற்றும் திருமணம் வரை செல்வதும் வாடிக்கையாக நடைபெறுவதாக கூறுகிறார்கள். ஒத்த எண்ணம் கொண்ட இத்தகைய நபர்கள் தங்களுக்குள் வாழ்வை அமைத்துக்கொள்வது மூலம் தெளிவான புரிதலுடன் வாழ்க்கையை கொண்டுசெல்ல முடிவதாக நினைக்கிறார்கள்.  சிலர் திருமணங்களுக்கு பின்பு குழந்தைகள்  பெற்றுக்கொள்கிறார்கள், சிலரோ குழந்தைகளை தத்தெடுக்கிறார்கள். இவர்களின் வாழ்க்கையும் மற்ற திருமணமானவர்களின் வாழ்க்கையை போலவே அமைகிறது, பெரிய மாற்றங்கள் இல்லை என்றும் தெரிகிறது.

அலெக்சிஸ் உடனான சந்திப்பின் மூலம் இப்படி பல விஷயங்கள் தெரிந்தாலும், இறுதியாக அவர் அழுந்த சொல்வது ஒன்றுதான் சமூகம் இவர்களை அங்கீகரிக்க வேண்டும்என்பதுதான்.

எல்லோருக்கும் தெளிவான உண்மை புரிந்தால், அங்கீகாரம் என்பது தானாக கிடைக்கும் என்பதும் அவர் நம்பும் ஒரு விஷயம். நடக்கும் என்று நாமும் நம்புவோம்.

(Source: Gopi Shankar, Transcribed and Compiled in Tamil: Vijay Vicky)
© Gopi Shankar (2014). Maraikkappatta Pakkangal: மறைக்கப்பட்ட பக்கங்கள். Srishti Madurai. ISBN 9781500380939.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s