Categories
News

லெஸ்போஸ் தீவில் நங்கை

சாப்போ

ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் ஓரின காதல் இலக்கியங்களில் பெண்ணாக தன் பங்களிப்பை சிறப்பாக கொடுத்து, இன்றுவரை புகழால் மங்காத பெண் ஒருவரை பற்றி இப்போது பார்க்கலாம். அவள் தான் “சாப்போ” கிமு615இல் கிரேக்க நாட்டின் லெஸ்போஸ் தீவில் ஒரு உயர்குடி பெண்ணாக பிறந்தார். பல அண்ணன்களின் செல்ல தங்கையாக குடும்பத்தில் வாழ்ந்தார். வசதியான கணவரான செர்சிலாஸ் மற்றும் தன் மகள் க்லெய்ஸ் மூவருமாக இனிதான இல்லறத்தில் சிறப்பாக வாழ்ந்தனர். லெஸ்போஸ் நகரில் பள்ளி மற்றும் திருமணம் ஆகாத இளம் பெண்களுக்கான நிறுவனம் என்று தன் இளமை காலத்தை கழித்தார். காதல் கடவுள்களான எரோஸ் மற்றும் ஆப்ரோடைட் (பெண் கடவுள்) வழிபாட்டில் மிகுந்த இணக்கம் காட்டினார். ஒரு நல்ல ஆசிரியராகவும், திறமையான கவிஞராகவும் வளர்ந்தார். “ஒரு இளம் கப்பல் மாலுமியால் ஏமாற்றப்பட்டதால் பாறையில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார் சாப்போ” என்று புகழ்பெற்ற ரோமானிய எழுத்தாளரான ஓவிட் கூறுகிறார். ஆனால், மற்ற வரலாற்று ஆய்வாளர்களோ, “இல்லை. சாப்போ, தன் முதிய வயதில் இயற்கை மரணம் தான் அடைந்தார்” என்று சொல்கிறார்கள். பெரும்பாலான உயர்ந்த மக்களின் மரணம் இப்படி ஒரு தெளிவு இல்லாமல் இருப்பது நமக்கொன்றும் புதிதல்ல. மூன்றாம் நூற்றாண்டில் இவருடைய படைப்புகள் ஒன்பது தொகுப்புகளாக தொகுக்கப்பட்டது. இன்றுவரை எழுத்தாளர்களின் எழுத்துகளில் மேற்கோள்களாக அதிகம் எழுதப்பட்டது சாப்போவின் படைப்புகள் தான். பெரும்பாலும் பெண்-பெண் காதலை அதிக கவிதை நயத்துடன், படிக்கும் எவரையும் சிலிர்க்க வைக்கும் விதத்தில் எழுதியுள்ளார். இவர் பிறந்த ஊரான “லெஸ்போஸ்” நினைவாகத்தான் இன்று நாம் பயன்படுத்தும் “லெஸ்பியன்” என்ற வார்த்தை உருவாக்கப்பட்டது. அந்த விதத்தில் பெண்களில் இந்த பாலியல் உரிமைக்காக அதிகம் குரல் கொடுத்தவர் இவர்தான். புராணங்களின் , தெய்வங்களின் மூலமாகவே கவிதைகளை அதிகம் படைத்த கவிஞர்களுக்கு மத்தியில் சாமானிய மக்களின் வாழ்க்கையை அதிகம் பிரதிபளிக்கும்படி கவிதைகளை வடித்தார். பல எதிர்ப்புகளையும், தோல்விகளையும் கண்டும் காணாமல் தன் பணியை மட்டுமே செய்த சாப்போவின் எழுத்துக்கள் இன்று பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
கிரேக்க வரலாற்றை போலவே ரோமானிய வரலாறு ஓரின விருப்பத்தை எப்படி கையாண்டது என்பதையும் கவனிக்க வேண்டும். பலர் இதை எதிர்த்தும், பலர் அதை ஆதரித்தும் தத்தமது கருத்துக்களில் முரண்பட்டு நின்றனர். சிலர் அதை பற்றிய கருத்து எதுவும் கூறாமல் அமைதி காத்தனர். ரோமானியர்களில் ஹெலனோபில் மன்னர் ஹார்டியன் காலத்தில்தான் இதைப்பற்றிய விவாதங்கள் தலைதூக்கின. ஆனால், மன்னர்ககாப எலகாபாலஸ் பல ஆண் காதலர்களுடன் உறவாடியதை அவர் வரலாற்றில் நாம் அறியலாம். அதில் ஒருவனை பலர் முன்னால் திருமணம் கூட அவன் செய்ததாக சொல்லப்படுகிறது. அதே போல கமடஸ் என்ற மன்னரும் பல ஆண்களுடன் உறவு கொண்டதற்கான சான்றுகள் உள்ளன. பெரும்பாலும் ரோமானியர்களும் கிரேக்கர்களை போலவேஉடலுறவில்  வயது முதிர்ந்த ஆண்கள் ஆளுமை செலுத்துபவர்களாகவும், இளைய ஆண்கள் அடிபணிந்து போவதாகவும் அங்கு எழுதப்படாத விதியாக இருந்தது. ஆனாலும், சில சான்றுகள் மூலம் அதற்கு நேரெதிரான உடலுறவு நடந்துள்ளது அரிதான நிகழ்வுகளாக. அதாவது, இளம் வயது இளைஞன் ஆளுமை செலுத்துபவனாக இருப்பதை போன்ற செய்திகள் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், உடலுறவை பொருத்தவரை ஆக்டிவ் அல்லது பாசிவ் எதுவாக இருந்தாலும், இரண்டுமே சமமான இன்பத்தை மட்டுமே கொடுப்பதாக அவர்கள் நினைத்தார்கள், அதனால் அதில் உயர்வு, தாழ்வு போன்ற எண்ணங்கள் அவர்கள் பார்க்கவில்லை. நீரோ மன்னன் தன் அடிமையான டோரிப்போராஸ் உடன் உறவு கொள்ளும்போது, அடிமை ஆளுமை  செலுத்தும் ஆக்டிவாக இருப்பதை வரலாற்று ஆசிரியர் சுடோனியஸ் குறிப்பிடுகிறார். அதே போல உயர் பதவியில் உள்ள பல ராணுவ தளபதிகள் தங்கள் வீரர்களுடன் உடலுறவில் ஈடுபடும்போது, அடிபணியும் பாசிவ்ஆக இருப்பதாகவும் சுடோனியஸ் கூறுகிறார். ரோமானிய ஓரின வரலாறுகளில் ஆசன வாய் புணர்தலை விட, வாய் புணர்ச்சி அதிகம் சொல்லப்படுவதை பார்க்க முடிகிறது. கிரேக்க வரலாற்றைவிட ரோமானிய வரலாறு ஒருவிஷயத்தில் முரண்படுகிறது, அதாவது கிரேக்கர்களை பொருத்தவரை சிறிய அளவிலான ஆண் குறியே அழகாக குறிப்பிடப்படுகிறது. ஆனால், ரோமானிய வரலாற்றில் அளவில் பெரிதான ஆண் குறியே மற்றவர்களை ஈர்க்கும் தன்மை உடைய ஒன்றாக கருதப்படுகிறது. பல மன்னர்களும் தங்கள் காதலர்கள் பெரிய ஆணுருப்புடன் தங்களை சுற்றி இருப்பதை விரும்புவதாக வரலாறு பதிவுகள் தெரிவிக்கிறது.

© Gopi Shankar (2014). Maraikkappatta Pakkangal: மறைக்கப்பட்ட பக்கங்கள். Srishti Madurai. ISBN 9781500380939.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s