Categories
News

பால் புதுமைக் கோட்பாடு – © கோபி ஷங்கர்


பொதுவாக அறியப்பட்ட  பொது இருமை நிலை கொள்கையில் (hetero-normative) இருந்து விடுபட்டு தனி சார்பு நிலையில் வாழ விரும்பும் மக்களே பால்புதுமையினர். சமூகம் வரையறுத்த குறிச்சொற்களை, அடையாளங்களை  ஏற்க மறுத்து, அதன் அதிகார கட்டமைப்பை கேள்வி கேட்பதே கோணல் கோட்பாட்டின் (queer Theory) முதல் நிலையாக உள்ளது.

பெண்ணியத்திற்கு கருப்பொருள் பெண்களாக இருந்த நிலையை மாற்றி பெண்மையை அதன் மையம் வைத்து, திருனர் பெண்ணியம் (Trans Feminism), நங்கையர் பெண்ணியம் (Lesbian Feminism), கோணல் பெண்ணியம் (Queer Feminism) என்று பல பிரிவுகளை உருவாக்க வழி செய்தது இந்த பால்புதுமையர் கோட்பாடு.
ஆண், பெண் என்ற இருமையை மீறி திருனர் வகையிலும் இருமைகொள்கை வளர்ச்சி அடைந்ததால்  நவீன திருனர் நிலை கொள்கையின் மூலம் (Trans-normative) இருக்கும் பாகுபாடு ஏறாலாம். பால் மாற்று அறுவை சிகிச்சை, கலாச்சார பெண்கள் என்ற வரையறைக்குள் சிக்குவது, குண நலன்களில் பெண்மை வெளிப்பாடு , நடையில் நளினம் என்ற மிகவும் பின்தங்கிய தாரலமயமற்ற கட்டமைப்பு இங்கும் உள்ளது. அறுவை சிகிச்சை செய்யாத திருனர்களை ஒதுக்குவது,திருனர் சமூகம் வரையறுத்த நிலைப்பாட்டில் வராத மனிதர்களை ஒதுக்குவது என்று, வரலாற்றின் முன் பகுதியில் இருந்தே தங்களுக்கான மொழி, கலாச்சாரம் என்பதுடன் இருமை கொள்கையையும் உருவாக்கி வளர்ந்துவிட்டது இந்த திருநங்கை சமூகம். 
இந்த பாகுபாட்டை கடந்து எண்ணற்ற பாலினங்களை அரவனைப்பதுதான்  இந்த கோட்பாடு. இங்கும் நம் பார்வை ஓரின புணர் பொது நிலையில்  (Homo-normative) சுருங்கிவிடாமல் ஒரு விரிவான பொது பார்வை சார்ந்து வர வேண்டும். மனித உணர்வுகளின் வெளிப்பாடான மொழியின் ஆதிக்கத்தில் இவை அடங்கிவிடும்.
எப்போதுமே நாம் ஒருசில விஷயங்களை காலம் காலமாக சொல்வதைத்தான் நம்புவோம். பெரும்பான்மையை நோக்கித்தான் நமது எண்ணமும் இருக்கும். ஆண் பெண் என்ற இரண்டு பாலினத்தை தவிர, அதை தாண்டிய, அந்த எல்லைகளுக்கு அப்பாற்பட்ட பாலினங்கள் பற்றி நாம் யோசித்திருக்க மாட்டோம், யோசிக்க இந்த சமூகமும் நம்மை விட்டிருக்காது. ஒரு நாள்என்றால் அதில் “இரவு பகல்” என்ற இரண்டை நாம் பொதுவாக குறிப்பிடலாம். அதே நேரத்தில் அதற்கு இடைப்பட்ட காலங்களான “அதிகாலை, எற்பாடு, நண்பகல், பிற்பகல், மாலை, யாமம்” போன்றவற்றை நாம் அதிகம் பேசமாட்டோம். 

அப்படி பேசாமல் விட்ட பாலினங்களை பற்றி சொல்வதுதான் பால் புதுமை கோட்பாடு. இருமை கொள்கை எனும் இறுக்கத்தில் வெறுமையான மொழிப்பெயர்ப்பு சார்ந்த மெய்யியல் பேசி அரைகுறை பெண்ணியத்திற்கு பெண்களை கருப்பொருளாக இந்தியாவில் வைத்து பெண்ணியமே பல பெண்களுக்கு எதிரியாக மாறிவிட்டது.

நாம் “இயல்பு” என்று வைத்திருக்கும் எல்லையினை கொஞ்சம் விலகி சென்றிருக்கும் பாலினங்கள் தான் அவை. பால் புதுமை பற்றி மைக்கேல் வார்னர் அவர்கள் பல புதிய விஷயங்களை கூறினார். ஆனால், இந்த புதுமைகளை ஏற்கும் அளவிற்கு நம் சமூகம் இன்னும் பழக்கப்படவில்லை. சமூகத்தில் ஆழப்புதைந்திருக்கும் சில நம்பிக்கைகளை நாம் எளிதில் மாற்றிவிட முடியாது. அப்படி மாற்றிட மேம்போக்கான காரியங்கள் மட்டும் போதாது, செய்யும் காரியங்கள் மக்களின் மனதில் தாக்கத்தையும், அதில் உள்ள உண்மைகளையும் புரியும் வண்ணம் இருக்க வேண்டும் என்கிறார் வார்னர். 

பால் புதுமையினர்களாக வகைப்படுத்தப்படும் பட்டியல்களில் “அவர்களை சமுதாயம் என்னவாக பார்க்கிறது? அவர்கள் என்னவாக இருக்க நினைக்கிறார்கள்?” என்பதை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.  ஸ்ட்ரைட் என்று சொல்லப்படும் எதிர்பால் ஈர்ப்பு கொண்டவர்களின் கண்ணோட்டத்தில் பொதுவான பாலின ஈர்ப்பையும், விருப்பங்களையும் பார்க்காமல், அவரவர் தனிப்பட்ட பாலியல் உரிமைகளை பொருத்து பால் புதுமை 1990களில் கோட்பாட்டாக உருவாக்கப்பட்டது. “பச்சை கண்ணாடியை அணிந்து, பார்ப்பதல்லாம் பச்சை நிறம்” என்று ஒருவன் நினைப்பதை போல, ஸ்ட்ரைட் கண்ணோட்டத்துடன் பாலின ஈர்ப்புகளை பற்றி பார்ப்பது தவறென்று சொல்லவே இந்த கோட்பாடு உருவானது.
1985-களில் மிகவும் பிரபலமான பெண்ணியவாதிகளான ஜீடித் பட்லர், ஈவ் செட்விக், பிராக எத்திங்கர், கிறிஸில்டா போல்ஸ்கி  ஆகிய அனைவரும் கோணல் கோட்பாடை அடிப்படையாக வைத்து அறிவியல், மருத்துவம், சமூகவியல் எனப் பலத் தளங்களை ஒன்றிணைத்து உருவானது தான் பால் புதுமையர் கோட்பாடு. ஈவ் கொசஸ்கி செட்விக், ஜூடித் பட்லர், அட்ரியேன்னே ரிச் மற்றும் டயானா பஸ் ஆகியோர் இதன் அடிப்படை கட்டமைப்பை உருவாக்கினர்.

Dr. Bracha L Ettinger (பிராக எத்திங்கர்)

இது உலகத்தில் பரவலாக நிலைநாட்டப்பட்ட பாலின மற்றும் பாலியல் இருமைக் கொள்கையை கேள்விக்குள்ளாக்கியது. அதாவது சமூகத்தால் வரையறுத்து அறிவியலால் நிர்ணயிக்கப்பட்ட ஆண், பெண் என்ற இரண்டு பாலினத்தையும் கேள்விக்குட்படுத்தி இருமையின்மைக் கொள்கையை நிலைநாட்டியது. கலாச்சார பரிமாண வளர்ச்சி, மொழி கட்டமைப்பு இருபாலர் உடையிலும் தோற்றத்திலும் உள்ள வரையறை இவற்றை கேள்விக்கு உட்படுத்தியது


உதாரணமாக ஒரு பெண், ஆண் உடை அணிவது பெரிதாக தெரியாவிட்டாலும் ஒரு பதின்வயது ஆண், பெண் உடை உடுத்துவது மிகவும் கேவலமாக பார்க்கப்படுகிறது. ஆண்கள் என்றால் மீசையும், திடமான உடல் கட்டமைப்பும், தான் நெஞ்சை மறைத்து கொள்ளும் ஒரு சமூக கட்டாயம் இல்லாத சூழலில் இவை போன்ற பல முற்கருத்துக்களை தன்னுள் கொண்டிருக்கும் கலாச்சாரம் பாலின மற்றும் பாலியல் சார்ந்த பார்வைகள் நாட்டிற்கு நாடு மாறுபடலாம். பெண்களை கொண்டாடி பெண்மையை கேவலமாக பார்க்கும் சமூக கட்டமைப்பு என்றும் இருந்து கொண்டுதான் இருக்கும்

இந்நிலையில் இந்த உலகில் பாலினத்தை மையப்படுத்தி ஒரு இனம் கலாச்சாரம் மொழி சமூக உட்கட்டமைப்பு மூவாயிரம் வருடத்திற்கு முன்பு இந்தியா என்று வரையறுக்கப்படும் இந்த பிரதேசத்தில் இருந்ததாக அறியப்படுகின்றது. இதில் பெரும்பான்மையான சடங்கு சார்ந்த சம்பிரதாயங்கள் அழிந்துவிட்டாலும் இன்னும் உயர்துடிப்புடன் ஹிஜிரா சமூகம் அல்லது த்திரீத்திய ப்ராக்கிருத்தி சார்ந்த குழுமம்மாக வாழ்ந்து வருகின்றனர்

தென், தென்மேற்கு, வடக்கு, வடகிழக்கு ஆகிய திசைகளில் இவர்களின் கலாச்சாரம், பாரம்பரியம் இவர்களைப் பற்றி கிராமிய மற்றும் பழங்குடியினர் வழக்கில் உள்ள கதைகள், சம்பவங்கள் அவர்களின் மொழிகுடும்ப உறவுமுறை என்று பல மாறுபட்டுள்ளன. சமூகத்தால்வரையறுக்கப்பட்ட ஆண், பெண் என்றபாலின மற்றும் பாலியல் இருமைக் கட்டமைப்புக்குள் வராத அனைத்தையும் த்ரீத்திய ப்ராக்கிருத்தி என்று பிரித்தனர். இன்றைய சூழலில் இவர்களுக்கான சமூக அங்கீகாரம் கிடைக்காவிட்டாலும் இவர்கள் ஒடுக்கப்படாமலும் இருந்தனர். காலப்போக்கில் இவர்களை கடவுளுடன் தொடர்புபடுத்தும் செயல்களும் நடந்தேறின

இன்று பெருவாரியாக மூன்றாம் பாலினம் என்றால் அரவாணி சமூகத்தையோ அல்லது திருநங்கை சமூகத்தையோ மட்டும் குறிப்பிடுகின்றனர். ஆனால் முப்பது வருடத்திற்கு முன்பு ஒரு அரவாணிக்கோ அல்லது ஒரு திருநங்கைக்கோ அளிக்கப்பட்ட பொருளும் வரையறையும் வேறு. ஆனால் இன்று திருநங்கைகளுக்கு ஒரு அடையாளம் ஒரு உரிமை வேண்டும் என்று கூறிக்கொண்டு திரியும் பலரும் திருநங்கை அல்லது அரவாணி என்றால் யார்? மூன்றாம் பாலினத்தவர் என்றால் யார்? என்ற அடிப்படை கேள்விகளைக் கூட எழுப்பாமல் குறிப்பிடும்படி எந்த வரையறையும் இல்லாமல் இருக்கின்றது இன்றைய திருநங்கை சமூகம். மருத்துவ வசதி வளர்வதற்கு முன்பு ஒரு ஆண் தன்னை முழு பெண்ணாக பிரதிபலிக்க முடியாமல் இருந்தது. ஆனால் இன்று முகம் மற்றும் உடல் ரோமங்களை அகற்றி அதன் வளர்ச்சியை தடுத்து பால் மாற்று அறுவை சிகிச்சை செய்து பல்வேறு நவீன ஒப்பனை மூலம் (plastic surgery), (cosmestic surgery), (hormonetheropy) எனப்பல்வேறு மருத்துவ முறைகளை கையாண்டு ஒரு திருநங்கை தன்னை ஆணிலிருந்து பெண்ணாக மாற்றி பெண் எனும் பாலின அடையாளத்திற்குள் சென்று நுழைகிறாள். அதேபோல் ஒரு திருநம்பி தன்னை பெண்ணில் இருந்து ஆணாக மாற்றி ஆண் எனும் பாலின அடையாளத்தில் வாழ முற்படுகிறான்

ஆகமொத்தம், மூன்றாம் பாலினத்தவர் அல்லது அரவாணி சமூகத்தில் கூட ஆண், பெண் எனும்இருமை அடையாளங்களுக்குள் வராமல் இருப்பவர்களுக்கு பாலின சிறும்பாண்மையினர் என்று அழைக்கப்படும் அரவாணி சமூகம் ஜமாத் முறையில் எந்த வித அந்தஸ்தோ முதல் தர அங்கீகாரமோ இல்லாமல் தங்கள் குரல்வளை நசுக்கப்பட்டவர்களாக சிறும்பாண்மையினருள் சிறும்பாண்மையினராக வாழ்கின்றனர்

இந்த பாலின இருமையின்மையில் இருக்கும் பால்புதுமையினர் பெருவாரியாக ஒரு திருநங்கை பெண்ணானவர் ஆண்ணை தவிர்த்து பெண்ணை காதலித்தால் அத்திருநங்கையின் பாலியல் ஒருங்கிணைவை திரிநர்நங்கை என்று அழைப்பர். ஆனால் சமூகம் எப்படி ஒருப் பெண் பெண்ணையோ,ஆண் ஆண்ணையோதிருமணம் செய்து கொள்ள இடமளிக்காமல் இருக்கிறதோ அதேபோல் ஒரு திருநர்நங்கையின் காதலை 
அதாவது ஒரு திருநங்கை பெண்,பெண்ணை திருமணம்செய்து கொள்ள அவர்களின் ஜமாத் முறை தடைசெய்கிறது. ஒருசில திருநங்கைகள் தங்களை திருநர்நங்கைகள் என்று வெளிப்படுத்திய தருவாயில் அவர்களை ஜமாத்திற்கு வெளியில் தெரியாமல் கொலைகளும் செய்துள்ளனர். ஆனால் ஒரு திருநம்பி தன்னை ஒரு திருநர்நம்பி என்று வெளிப்படுத்தும் போது அதாவது ஒரு திருநம்பி ஆண், மற்றொரு ஆண்ணைகாதலிப்பது ஒரு பெரும் பிரச்சனையாக தெரியவில்லை

ஏனென்றால் திருநங்கை சமூகத்தை போன்று திருநம்பிசமூகத்திற்கு ஒரு பெரும் வரலாற்று கலாச்சார பின்புலமோ இல்லாமல் ஜமாத் எனும் முறை அவர்களுக்குள் இல்லாமல் இருப்பதும் ஒரு காரணம் என்றால் கூட திருநம்பியைப் பற்றி போதுமான விழிப்புணர்வோ பொதுச் சிந்தனையோ இல்லாததும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. தன்னை ஆண் என்றோ பெண் என்றோ ஒரு திருநர் என்றோ ஏற்றுக்கொள்ளாமல் மிகுதியாக பெண் தன்மை இருக்கும் ஆண்கள் அனைவரும் திருநங்கையாக இருக்க வேண்டும் என்ற முற்கருத்தை முறியடித்து இருமை பால் மாற்று அறுவை சிகிச்சைகளை ஏற்றுக்கொள்ளாமல் வாழும் மக்கள் அனைவரும் பால்புதுமையினர். இவர்களுக்கான தனி உடலியல், மனையியல், உயிரியல், வாழ்வியல் கூறுகள் மற்றும் பால்புதுமையினருக்கான ப்ரத்யேக மருத்துவ சிகிச்சைகளும், பால் மாற்று அறுவை சிகிச்சைகளும் இருப்பது இதுவரையிலும் இந்திய மருத்துவ சமூகத்திற்கே தெரியாத ஒரு பேருண்மை. இருமை எனும் கட்டமைப்பை வாழ்வில் அனைத்து தளங்களிலும் சூழ்நிலையிலும் சிறிதும் ஏற்றுக் கொள்ளாதது இந்த பால்புதுமைக் கோட்பாடு

திருநங்கைகளின் ஜமாத் எனும் கட்டமைப்பை கேள்விக்குட்படுத்தி அதன் ஆணிவேர்களை அசைக்க முட்படுவது இக்கோட்பாடு. இதில் முக்கியமான பாலின நடுமைசார் மொழி பாலின மெய்யியல் எனப் பல அம்சங்கள் பொதுச்சமூகத்தில் இன்று உருவாகியுள்ளன. ஆண், பெண், திருநர் எனும் அடையாளத்துடன் ஒத்துப்போகாத பால் புதுமையினருக்கும் அனைத்து வகையான சமூக அங்கீகாரங்களும் வழங்கப்பட வேண்டும் என்று இது வழியுறுத்துகிறது

21-ம் நூற்றாண்டில் அமெரிக்காவின் தாராளமய கோட்பாடுகளில் இருந்து கோணல் கோட்பாடும், அதிலிருந்து பால்புதுமையினர் கோட்பாடு வெளிப்பட்டாலும் இதை போன்ற விஷயங்கள் நம் சங்க இலக்கியங்கள் வேதக்கால மரபுகளில் இருந்து 17-ம் நூற்றாண்டு வரை மிகவும் யதார்த்தமான கண்ணோட்டத்தில் வழங்கப்பட்டது என்றாலும் கோட்பாடு ரீதியான மிகத்தெள்ளிய பின்புலமில்லை.   
           
பால் புதுமை கோட்பாட்டின் அடிப்படை நோக்கம் என்பது, “சமூகம் வகுத்திருக்கும் பாலின கட்டமைப்பை மாற்றுவது, அதில் தனிப்பட்ட மனிதர்களின் பாலினத்தை வகைப்படுத்தி முறைபடுத்துவது” என்பதாகும். சமூக கட்டமைப்பின் நிர்பந்தத்தால் ஒருவர் தன் சுய அடையாளமான பாலினத்தை மாற்றி வாழ்வதற்கு பதிலாக, தனிநபர்களின் பாலியல் உரிமைகளுக்காக சமூக கட்டமைப்பில் ஒரு மாற்றத்தை கொண்டுவரலாம் என்பதே இதன் நோக்கம். பல தனி மனிதர்கள் சேர்ந்ததுதானே ஒரு சமூகம், அதனால் இது அடிப்படையில் சமூகத்திற்கும் வழு சேர்க்கும் என்பது உறுதி. தனிப்பட்ட ஒருவரின் உடல் மற்றும் உணர்வு சார்ந்து மட்டும் பாலினத்தை வகைப்படுத்தாமல், இதில் உயிரியல் கோட்பாடும் இணைந்தே வகைப்படுத்தப்படுகிறது. உதாரணமாக ஆணுக்கு இருக்கும் 46XYகுரோமோசோம்கள், பெண்ணுக்கு இருக்கும் 46XXகுரோமோசோம்கள் இயல்பான ஒன்றாக கருதப்படுகிறது. சிலருக்கு அதில் மாற்றம் உண்டாகி 45X, 47XXYஎன்று வரும் பொழுது இதையும் புதுமை கோட்பாட்டில் புகுத்தி இருக்கிறார்கள்.
இப்போது பொதுவாக பால் ஈர்ப்பு தொடர்பாக ஒருபால் ஈர்ப்பாளர்கள், இருபால் ஈர்ப்பினர், திருநர் போன்றோரை இணைக்கும் ஒரு பொதுவான வார்த்தையாக LGBTQ (Lesbian,Gay, Bisexual, Transgender, Queer) குறிப்பிடப்படுகிறது. இதன்மூலம் பாலினம் பற்றிய மாற்று கருத்து சமூகத்தில் தலையெடுக்க தொடங்கி இருப்பது ஆரோக்கியமான விஷயமாக தெரிகிறது. பால் புதுமை கோட்பாடு பலரையும் யோசிக்க வைத்தது, பலரையும் உண்மையை உணரவைத்தது என்று உறுதியாக சொல்லலாம். ஆனால் பால் புதுமை கோட்பாட்டை எதிர்ப்பவர்களும் பலர் இருந்தனர்.
ஆடம் க்ரீன் இதைப்பற்றி சொல்லும்போது, “பால் புதுமை என்பது சமூக மற்றும் வாழ்க்கை முறை கட்டமைப்பை ஆபத்துக்கு உள்ளாக்கும்” என்றார். மேலும் பால் புதுமையினராக வகைப்படுத்தப்பட்டுள்ள பட்டியல் வெள்ளை இனத்து மக்களை அடிப்படையாக வைத்தே உருவாக்கப்பட்டது , அப்படியானால் இது எவ்வாறு உலகில் உள்ள எல்லோரையும் இந்த வகைகளுக்குள் அடக்கும் என்று க்ரீன் இதை பற்றி கேட்கிறார். அதை மறுத்த வார்னர், “இது உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட விருப்பத்தை, எவ்வித சமரசமும் இன்றி ஏற்கும் ஒரு கோட்பாடாக இருக்கும்” என்கிறார்.

எது எப்படியாக இருந்தாலும் நிச்சயம் இந்த கோட்பாடுகள் பலரையும் தங்களை சுயபரிசோதனை செய்ய வைத்தது, இதுவரை தங்களின் பாலினம் பற்றிய தெளிவின்மையை ஒரு தெளிவான மனநிலைக்கு கொண்டுவந்தது. இது இன்னும் பல கட்டம் முன்னேறி, பல விதமாக அனைவரையும் சென்றடையும் விதமாக ஆய்வுகள் நடைபெற்று வருவதும் நல்லதொரு நம்பிக்கையைத் தருகிறது.

(Source: Gopi Shankar, Transcribed and Compiled in Tamil: Vijay Vicky)

Gopi Shankar (2014). Maraikkappatta Pakkangal: மறைக்கப்பட்ட பக்கங்கள். Srishti Madurai. ISBN 9781500380939.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s