Categories
News

Indian Penal Code 377 (IPC 377) – சர்ச்சைக்குரிய சட்ட பிரிவு 377 – கோபி ஷங்கர்

ஓரினச் சேர்க்கை என்பது தண்டனைக்குரிய குற்றம் என்று இந்திய உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 தற்போது விவாதத்தில் இருக்கிறது. இந்தச் சட்டத்தின்படி ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கலாம். முன்னதாக டெல்லி உயர் நீதிமன்றம் ஓரினச் சேர்க்கை சட்டப்படித் தவறில்லை என்று 2009ம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தது. இந்த உத்தரவும் தற்போது ரத்து செய்யப்பட்டுவிட்டது. இந்த விவகாரத்தை நாடாளுமன்றக் குழுவின் முடிவுக்கு விட்டுவிடுவதாகவும் தீர்ப்பு குறிப்பிடுகிறது. இந்தச் சட்டப்பிரிவை மாற்றும் அதிகாரம் இந்திய நாடாளுமன்றத்துக்கே இருக்கிறது என்றும் நீதிமன்றம் தலையிடக்கூடிய பிரச்னை இதுவல்ல என்றும் அத்தீர்ப்பு மேலும் கூறுகிறது.
இந்தத் தீர்ப்பு மனித உரிமை மீறல் என்று ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா அனைத்தும் அறிக்கை வெளியிட்டுள்ளன. உள்நாட்டிலும் எதிர்ப்புக் குரல்களைக் கேட்கமுடிகிறது. சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப. சிதம்பரம், அரவிந்த் கேஜ்ரிவால், பிருந்தா காரத், ஓமர் அப்துல்லா ஆகியோரும் பல மத்திய அமைச்சர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஒரு பால் உடலுறவு என்பது ஒருவருடைய தனிமனித உரிமை மற்றும் விருப்பம் சார்ந்தது  என்று இவர்களில் பலர் வெளிப்படையாகவே தங்கள் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். அரசு அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து தீர்வு காணவேண்டும் என்று சுஷ்மா சுவராஜ் கூறியிருக்கிறார்.
மற்றொரு பக்கம், சுப்பிரமணியம் சுவாமி, வைகோ மற்றும் பா.ஜ.கவின் பெரும்பான்மையான அமைச்சர்கள் இத்தீர்ப்பை வரவேற்றுள்ளனர். பா.ஜ.க வின் முன்னாள் உறுப்பினர் ராகவ்ஜி கடந்த 2013 ஜூலை இதே சட்டத்தால் கைது செய்யப்பட்டவர். அவருடைய கருத்து இது. ‘இந்த 150 வருட பழைய சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும், இந்தச் சட்டத்தை முழுமையாக நீக்குவதும் பிரச்னைக்குரியதே.’
அரசியல்வாதிகளுக்கு இது மற்றுமொரு பகடைக்காய் என்றபோதும் ஒரு விஷயத்தை மறுக்கமுடியாது. முதல் முறையாக ஒருபால் ஈர்ப்பு சார்ந்த போராட்டத்துக்கு வெளிப்படையாக அரசியல்வாதிகளும், நடிகர்களும் கலைத்துறையினரும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்! மேலும், தற்போது இந்தியா முழுவதும் இது விவாதப்பொருளாகியிருக்கிறது.
377வது பிரிவில் சட்டத்திருத்தம் கொண்டு வருவது குறித்தும் ஒரு பால் உடலுறவு குற்றமாகாது என்றொரு மசோதா கொண்டுவருவது குறித்தும் மத்திய சட்டத் துறை அமைச்சகம் பரிசீலித்து வருவதாகச் சொல்கிறார்கள். இது தொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கியூரேட்டிவ் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு மறு ஆய்வு செய்யுமாறு கோரவேண்டும் என்றும் ப. சிதம்பரம் கூறியுள்ளார். ஆனால் இவையனைத்தும் யோசனை அளவிலேயே இருக்கின்றன.
15 டிசம்பர் 2013 அன்று சென்னை உள்பட உலகெங்கும் 36 நகரங்களில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்துப் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஒரு பால் ஈர்ப்புடையவர்கள் இந்த ‘உலகளாவிய எழுச்சி தினத்தில்’ தங்கள் கோரிக்கைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அவற்றில் சில: தீர்ப்பு உடனடியாகத் திரும்பப் பெற்றாகவேண்டும். மாநில அளவில் 377வது பிரிவில் சட்டத் திருத்தம் கொண்டுவந்து, 18 வயதுக்கு மேல் பரஸ்பர சம்மதத்துடன் இருவருக்கு இடையில் தனிமையில் நடைபெறும் பாலியல் உறவைக் குற்றமாகக் கருதக்கூடாது.
மதுரையில் செயல்படும் ஸ்ருஷ்டி என்னும் பாலின ஆய்வு மையம் இத்தீர்ப்பை நடுநிலையோடு அணுகுவதாக அறிவித்திருக்கிறது. ஸ்ருஷ்டி மதுரை இயக்குனர் ஜான் மார்ஷல் முன்வைக்கும் பரிந்துரைகள் இவை. அறிவியல்,மருத்துவம் மற்றும் உளவியல் ஆராய்ச்சிகள்மூலம் கிடைக்கும் முடிவுகளை வைத்துதான் ஒருபால் ஈர்ப்புடையவர்கள்  விஷயத்தில் தீர்வு காணப்படவேண்டும். கலாசாரம் அல்ல, அறிவியலே சட்டத் தீர்வுக்கான பின்னணியாக இருக்கவேண்டும். ஒரு தனி மனிதனுக்கு அரசு அளிக்கும் அத்தனை பாதுகாப்புகளும் ஒரு பால் ஈர்ப்புடையவர்களுக்கும் அளிக்கப்படவேண்டும். அவர்கள்மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும். மனிதாபிமானத்துடன் அவர்களை அணுகவேண்டும். உச்ச நீதிமன்றம் இந்தச் சட்ட பிரிவை மறு பரிசீலனை செய்யவேண்டும்.
இயற்கைக்குப் புறம்பான குற்றங்கள் என்ற பிரிவின்கீழ் வரும் இந்தச் சட்டம் 1860ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மெக்காலே பிரபுவால் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி ஆணோ பெண்ணோ தன்னிச்சையாகத் தன்னுடைய பாலினத்தைச் சேர்ந்த ஒருவருடன் உடலுறவு கொண்டால் அவர் குற்றவாளி ஆகிவிடுகின்றார். அதிகபட்சம் வாழ்நாள் முழுவதையும் அவர் சிறையில் கழிக்கவேண்டியிருக்கும்.
இனப்பெருக்கத்துக்கான ஆண் பெண் உறவே இயற்கையானது என்னும் கருத்தாக்கத்தின் விளைவாகவே ஓரினச் சேர்க்கை இயற்கைக்கு முரணானதாகக் கருதப்படுகிறது. அடிப்படைவாத கிறிஸ்தவக் கண்ணோட்டத்தைக் கொண்டு ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த சட்டம் இது என்பதை நாம் கவனிக்கவேண்டும். அவர்களுடைய வருகைக்கு முன்னால் ஓரினச் சேர்க்கை குற்றமாக இங்கு கருதப்பட்டதில்லை. இன்று ஓரின ஈர்ப்பு தொடர்பாக மட்டுமே அறியப்படும் 377வது சட்டப் பிரிவு தொடக்கத்தில் வாய், ஆசனவாய் பங்கு பெறும் கலவியையும் இயற்கைக்கு விரோதமானது என்றே கருதியது.
தனிமனித செயல்பாடுகளைத் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதும் இந்தச் சட்டம், எண்ணற்ற மனித உரிமை மீறல்களை நடைமுறைப்படுத்தியது. எனவே, இந்தச் சட்டப் பிரிவுக்கு எதிரான போராட்டத்தை மனித உரிமை சார்ந்த போராட்டமாகக் கடந்த 2001 முதல் நடத்தி வருகிறது அஞ்சலி கோபாலனால் தொடங்கப்பட்ட ‘நாஸ்’ என்னும் அறக்கட்டளை. சென்ற மாதம் வெளிவந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய மேல் முறையீடு செய்யப்போவதாக அஞ்சலி கோபாலன் ஆழம் இதழுக்குக் கூறியுள்ளார்.
ஓரின ஈர்ப்பு குறித்து இங்கு நிலவும் பல கருத்துகள் அர்த்தமற்றவை. இது மேற்குலக கலாச்சாரம் என்று பலர் நினைக்கிறார்கள். உண்மையில் கிரேக்கமும் ரோமமும் மட்டுமல்ல நாமும்கூட வரலாற்றுக் காலங்களில் ஓரின ஈர்ப்பை குற்றமாகக் கருதியதில்லை. இதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. அதே சமயம், ஓரின ஈர்ப்புக்குச் சமூக அங்கீகாரம் வழங்கப்பட்டதில்லை என்பதையும் சொல்லியாகவேண்டும்.
சனாதன இந்து மதம் ஓரின ஈர்ப்பைக் குற்றமாகக் கருதியதில்லை. சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவர்தான் ஐயப்பன் என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனரும் ஆன்மிக குருவுமான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கருத்து தெரிவித்துள்ளார். தன்னிடம் வருவோரை ஒருபால் ஈர்ப்பு எனும் மன வியாதியிலிருந்து விடுவிப்பதாக யோகா கலையை வியாபாரமாக நடத்திவரும் பாபா ராம்தேவ் அறிக்கை விடுத்துள்ளார். அவருக்கு 1973ல் அமெரிக்க உளவியல் சங்கம் மனநல குறைபாடுகள் பட்டியலில் இருந்து ஒருபால் ஈர்ப்பை நீக்கியது அவருக்குத் தெரியாது போலும்.
ஓரினச் சேர்க்கைமூலம் எய்ட்ஸ் பரவும் என்றொரு தவறான கருத்து இங்கு பரப்பப்பட்டுள்ளது.  இந்தக் கருத்தை மக்கள் மனத்தில் இருந்து மாற்றுவதற்காக, எயிட்ஸ் விழிப்புணர்வுடன் சேர்ந்து ஓரின ஈர்ப்பு குறித்தும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுவதால் மக்களுக்குக் கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டுவிட்டது போலும். ஓரின ஈர்ப்பு தவறல்ல என்று பல நூறு அரசு சாராத அமைப்புகள் கிட்டத்தட்ட இருபதாண்டு காலமாகப் பல கோடிகள் செலவு செய்து பிரசாரம் மேற்கொண்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. இருந்தும் பல தவறான அபிப்பிராயங்களை மக்கள் மனத்தில் இருந்து அவர்களால் களைய முடியவில்லை என்பதே நிதர்சனம்.
எனவே, சில விஷயங்களை இங்கே தெளிவுபடுத்தவேண்டியது அவசியமாகிறது. எந்தவொரு ஆணும் சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் தங்கள் தற்காலிக பாலியல் இச்சையைத் தீர்த்துக்கொள்ள மற்றொரு ஆணுடன் உறவு கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. சிறைச்சாலைகள், பள்ளி, கல்லூரி விடுதிகள், ராணுவ முகாம்கள் என்று எதிர்பாலினத்தவர் இல்லாத இடங்களில் பெரும்பாலும் இத்தகைய வழக்கம் நிலவுகிறது. இது பெண்களுக்கும் பொருந்தும். இவர்கள் ஓரின விரும்பிகளாகக் கருதப்படமாட்டார்கள். ஓரின ஈர்ப்பு கொண்டவர்கள் உடல் தேவையைக் கடந்து உணர்வு ரீதியாகவும் தன் பாலினத்தவரிடம் இணைப்பை எதிர்பார்ப்பார்கள்.
பதின் பருவத்தில் ஒருவனுக்கு இயல்பாகவே எதிர் பாலினத்தின்மீது ஈர்ப்பு இல்லாவிட்டாலும் சமூக நிர்பந்தம் காரணமாகத் தன் விருப்பத்தை மறைத்துக்கொண்டு அவ்வாறு செய்யவேண்டிய நிர்பந்தம் சிலருக்கு ஏற்பட்டுவிடுகிறது. தன் நண்பர்களிடம் இருந்து தான் தனித்துவிடப்படுவோம் என்னும் அச்சத்தில் தன் இயல்பை மாற்றிக்கொள்ள முயன்று, தடுமாறி, மனக்குழப்பத்துக்கு ஆளாகி மன நோயாளியாகவும் ஒருவர் மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஓரின விருப்பம் தவறல்ல என்பதை இவர்கள் உணரவேண்டும். ஆண், பெண் இருவருக்கும் இது பொருந்தும்.
பொதுவாக ஓரின ஈர்ப்பு குறித்த பிரசாரங்களில் பெண்களின் ஓரின விருப்பம் குறித்தும் அவர்களுடைய உரிமை குறித்தும் எதுவும் இடம்பெறுவதில்லை. இந்த நிலைமையும் மாற்றப்படவேண்டும். பாலின வேறுபாடு இல்லாமல் பாலியல் உரிமை நிலைநாட்டப்படவேண்டும்.
ஒருவருடைய தனிப்பட்ட விருப்பத்தில் தலையிடும் உரிமை மத அதிகாரம் கொண்டவர்களுக்கோ அரசு அதிகாரம் கொண்டவர்களுக்கோ இல்லை என்னும் உண்மையை அனைவரும் உணரவேண்டும். அவ்வாறு உணர்வதற்குக் காலம் பிடிக்கும் என்பது உண்மை என்றாலும் சோர்ந்துவிடாமல் அனைவரும் இந்த உரிமைக்குக் குரல் கொடுக்கவேண்டியது அவசியம்.
  • 377 சட்டப்பிரிவை ஓரினச் சேர்க்கையாளர் சார்ந்த சட்டமாக மட்டும் பார்க்கக்கூடாது. ஆண், பெண் தவிர்த்து பிற பாலினங்களின் உடலுறவையும் இந்தச் சட்டம் தடை செய்கிறது. உதாரணத்துக்கு, திருநங்கை, திருநம்பி, பால்புதுமையினர் உள்ளிட்டவர்களின் பாலியல் உரிமைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • ஒருபால் உறவு  என்பதும் ஓரினச்சேர்க்கை என்பதும் வெவ்வேறானவை.
  •  ஒருவர் அதே பாலினத்தைச் சேர்ந்த இன்னொருவரைக் காதலிக்கிறார் என்பதாலேயே அவரை இந்தச் சட்டப் பிரிவை வைத்து கைது செய்ய இயலாது.
  • இந்தச் சட்டப்பிரிவில் ஒருவரைக் கைது செய்ய தகுந்த மருத்துவரீதியான ஆதாரங்கள் வேண்டும்.
  • இந்தச் சட்டம் நடைமுறையில் இருப்பதால் ஓரின உறவை உடல் ரீதியான வியாபாரமாக மாற்றமுடியாது. அதை வைத்து பணம் சம்பாதிக்கவும் முடியாது.
  • ஓரினச் சேர்க்கை குறித்து வெட்கப்பட எதுவும் இல்லை. அது ஒரு மாறுபட்ட பாலியல் செயல்பாடு, மிகவும் சாதரணமானதும்கூட. இது சிக்மண்ட் ஃபிராய்டின் கருத்து.
  • எதிர் பால், ஒரே பால் ஈர்ப்பு போக மொத்தம் பத்துக்கும் மேற்பட்ட பாலின ஈர்ப்புகள் உள்ளன.
  • ஒரு பால் ஈர்ப்புக்கும் திருநங்கைகளுக்கும் தொடர்பில்லை. ஒரு பால் ஈர்ப்புடைய திருநங்கையை திருனர் நம்பியை ட்ரான்ஸ்கே (Transgay) என்றும் திருனர் நங்கையை ட்ரான்ஸ்லெஸ்பியன் (Translesbian) என்றும் அழைப்பார்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s