Categories
News

"போராடாமல் கிடைப்பது வெற்றி இல்லை" – அஞ்சலி கோபாலன் © Srishti Madurai.

அஞ்சலி கோபாலன்” – சமூக ஆர்வலர் என்ற ஒற்றை சொல்லில் இவர்களின் ஒட்டுமொத்த சேவையையும் சுருக்கிவிட முடியாது….. “NAZ” என்ற சமூக விழிப்புணர்வுக்கான அமைப்பின் நிறுவனர்….. சமூகத்தின் விளிம்பு நிலை மனிதர்களுக்காக பல வருடங்களாக குரல் கொடுத்துவரும் இவரின் போராட்டங்களுக்கு 2005 ம் ஆண்டின் இந்தியாவின் சார்பாக நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிகழ்வையும், டைம்ஸ் பத்திரிகையின் உலகின் 100 வலிமை மிக்கவர்களின் பட்டியலில் முக்கிய இடத்தை பெற்றிருக்கும் நிகழ்வையும் ஒரு சிறு உதாரணமாக சொல்லலாம்….. நம் நாட்டின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் சார்பாக சிறப்பிக்கப்பட்டது, காமன்வெல்த் நாடுகளின் விருது பெற்றது என்று இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்….எச்.ஐ.வி விழிப்புணர்வு, மாற்றுப்பாலினத்தவர் பற்றிய விழிப்புணர்வு என்று பொதுவாக சமூக ஆர்வலர்கள் கூட போராடத்தயங்கும் விஷயங்களுக்கு குரல் கொடுப்பவர்….. “எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள் தொடுவதால் அதன் பாதிப்பு மற்றவர்களுக்கு வராது “ என்று முதன்முதலில் எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வை இந்தியாவில் கையில் எடுத்தார், அதில் வெற்றியும் பெற்றார்….. அமெரிக்காவில் தொடங்கிய இவரின் போராட்டங்கள், இன்று நம் மதுரை வரை வேரூன்றி இருக்கிறது…… பிறப்பால் தமிழர் என்றாலும், ஏனோ இத்தகைய நபரை நம் ஊடகங்கள் பெரிதாக கௌரவிக்கவில்லை….. இவ்வளவு புகழுக்கும் உரியவராக இருந்தபோதிலும் அதைபற்றிய சிறு தற்புகழ்ச்சியும் இல்லாமல், மிகவும் எளிமையாக என்னுடன் பேசியது வியப்பாகவே இருந்தது…..
அந்த சுவையான நேர்காணலின், சுவைமிக்க சில பகுதிகள் இங்கே……. 
சமூக ஆர்வலர் என்றால் பொதுவாக அரசியல் பிரச்சினைகளை முன்னிறுத்தி மட்டுமே போராடும் நபர்களுக்கு மத்தியில், சமூகத்தின் விளிம்பு நிலை மனிதர்களுக்கு போராடும் எண்ணம் எப்படி வந்தது?
இது நானாக தேர்ந்தெடுத்த விஷயம் இல்லை…. அமெரிக்கா போன்ற நாட்டில் எயிட்ஸ் தொடர்பான விஷயத்தை பற்றி கையாளும் முறையை பார்த்த எனக்கு, இந்தியா வந்ததும் இத்தகைய எயிட்ஸ் நோயாளிகளை கையாளும் முறையை பார்த்து அதிர்ச்சியானேன்…. குறிப்பாக எயிட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நிராதவர்களாக விடப்பட்டதை கண்டு கவலைப்பட்டேன்…. பின்பு, ஒருசில குழந்தைகளை அரவணைத்த தொடங்கி பின்பு “NAZ” அமைப்பாக அது வளர்ந்து நிற்கிறது…. தொடுதல் மூலம் எயிட்ஸ் பரவாது என்ற அடிப்படை உண்மையை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவே பல கட்ட போராட்டங்களை முன்னெடுக்க வேண்டி இருந்தது….  பின்னர் எயிட்ஸ் நோயுடன் ஓரின விரும்பிகளை இணைத்து பார்க்கும் ஒரு அறியாமை  மக்களிடத்தில் இருந்தது…. எயிட்ஸ் பாதிப்புக்கு காரணமாக ஓரின சேர்க்கையை பலர் தவறுதலாக புரிந்துகொண்டதை மாற்ற நினைத்து இப்போது மாற்றுப்பாலின விழிப்புணர்வு போராட்டமாக என் களம் மாறிவிட்டது…. பால் சார்ந்த போராட்டங்கள் மட்டுமல்லாமல் மற்ற பல போராட்டங்களும் நடத்தி இருக்கிறோம்…. விளிம்பு நிலையில் இருக்கும் மக்கள் எத்தகைய பாதிப்பு அடைந்தாலும் அவர்களுக்காக போராடுவோம், அது பால் சார்ந்த போராட்டமாக இருந்தாலும் ஒன்றுதான்….
பால் சார்ந்த ஒரு போராட்டத்திற்கு ஒரு பெண்ணாக எப்படி தயார் ஆனீர்கள்?… அதில் நீங்கள் பெற்றதும் இழந்ததும் என்ன?

உண்மைதான்…. பால் சார்ந்த இப்படிப்பட்ட போராட்டங்களில் ஒரு பெண்ணாக, அதுவும் தனி மனுஷியாக முதன்முதலில் களத்திற்கு வந்தபோது அரசியல் ரீதியாகவும், சில மத ரீதியான அமைப்புகள் மூலமாகவும், தனி நபர்கள் மூலமாகவும் என்று தடைகளும், மிரட்டல்களும் நிறைய வந்தன…. ஆனால், சிறுவயது முதலே ரொம்பவே மனதைரியத்துடன் வளர்ந்த எனக்கு, இந்த தடைகளும், மிரட்டல்களும் பெருசா தெரியல…..
அப்படி எனக்கு எதிர்ப்புகள் அதிகமாக அதிகமாகத்தான் எனக்கும் என் போராட்டங்களை அதிகப்படுத்தும் எண்ணம் வேகமாக வளர்ந்தது…. எதிர்ப்புகளை நான் எதிர்க்காமல், கண்டுகொள்ளாமல் விட்டால் அவர்களே சில நேரத்திற்கு பிறகு கண்டுகொள்ளாமல் போய்விடுவார்கள்…. எத்தகைய பிரச்சினையையும் கையாளும் மனவலிமையையும், திறமையையும் அத்தகைய எதிர்ப்புகள் எனக்கு கொடுத்து….
உங்கள் குடும்பத்தை பற்றி சொல்லுங்களே……

அப்பா விமானப்படையில் பணிபுரிந்தவர், அம்மா இல்லத்தரசி…. அப்பா தமிழ்நாடு ,அம்மா பஞ்சாப்…. அதனால்தானோ என்னவோ, இந்தியாவோட வடக்கு முதல் தெற்கு வரை மொத்தமும் என் சொந்த ஊராக ஆகிவிட்டது…. அப்பப்போ எனக்கு குழந்தை இல்லைன்னு வருத்தம் வந்தாலும், என்னை “அம்மா”னு கூப்பிட இங்க ஆயிரக்கணக்கான பிள்ளைகள் இருக்குறப்போ எனக்கு அந்த கவலை பெருசா தெரியாது….. தனி மனுஷியா இருக்குறதால கொஞ்சம் மன வருத்தம் இருந்தாலும், இப்படி தனி மனுஷியாக இருந்ததால்தான் என்னால் இவ்வளவு போராட்டங்களை தாண்டியும் அதே தைரியத்தோட மறுபடியும் நிற்க முடிகிறது…..
சமீபத்திய உங்கள் மதுரை வருகையில் முதல் முறையாக மாற்றுப்பாலின விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்ட ஒரு விழாவில் கலந்துகொண்டதை பற்றி……

பொதுவாக நான் இதைப்போன்ற அமைப்புகள் நடத்துற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை…. ஆனால், மாணவர்களாக சேர்ந்து, சிருஷ்டி என்ற அமைப்பு சாராத நிறுவனகள் சாராத மாணவர் வட்டத்தின்  மூலம் தமிழ்நாட்டின் மதுரையில் நடத்திய இப்படி ஒரு விழாவில் கலந்துகொண்டது எனக்கு தனிப்பட்ட முறையில் ரொம்ப சந்தோஷமா இருந்தது…. உலகில் முதல் முறையாக இருபதிற்கும் மேற்ப்பட்ட பாலின வகைகளை வெளிக்காட்டிய பெருமை அந்த மாணவர்களுக்கு கிடைத்துள்ளது…… திருநங்கை ரேவதி, கல்கி சுப்பிரமணியன் போன்றவர்களுடன் அந்த மாணவர்களின் பங்களிப்பை ஊக்குவிக்க ஒரு “அம்மா”வாக நான் அங்கு சென்றேன்….. அங்கு வந்த மாணவர்களின் பங்களிப்பை பார்த்தபோது, மனநிறைவாக இருந்தது…. மதுரை போன்ற ஒரு ஊரில் இத்தகைய விழிப்புணர்வு விழாக்கள் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை…..நான் மதுரைக்கு முதன்முதலா அப்போதான் வந்தேன்…. என் ஓய்வு காலத்தை மதுரையில் கழிக்கும் ஆசையை உண்டாக்கிடுச்சு அழகான மதுரை மாநகரம்….
சர்வதேச அளவில் உங்களுக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் நம் இந்திய ஊடகங்களால் உங்களுக்கு கிடைக்கவில்லை என்று வருத்தம் இருக்கிறதா?
இதில் நான் வருத்தப்பட ஒன்றுமில்லை…. விளம்பரங்களுக்காக நான் இப்படி விஷயங்களை கையில் எடுக்கவில்லை…. பி.பி.சி , டைம்ஸ் போன்ற சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்ட பின்பு, நம் இந்தியாவின் ஆங்கில ஊடகங்கள் இந்த போராட்டங்கள் பற்றிய செய்திகளை வெளியிட்டன…. நான் பிரபலமாகனும் என்றோ, நான் ஊடகங்களில் மூலம் விளம்பரமாக வேண்டும் என்றோ எப்போதும் நினைத்ததில்லை….. நான் சொல்லும் செய்தி மக்களை சென்றடைய வேண்டும் என்றும், நாங்கள்  எதிர்பார்க்கும் விழிப்புணர்வு மக்களை சென்றடைய வேண்டும் என்றும்தான் நான் எதிர்பார்க்கிறேன்…. இது வெகுஜன மக்களையும் சென்றடைய வேண்டும் என்றால், அது ஆங்கில ஊடகங்களோடு நிற்காமல் மாநில ரீதியிலான பிராந்திய மொழி ஊடகங்களின் மூலமாகவும் மக்களை சென்றடைய வேண்டும்…. ஆனால், அப்படி எந்த மாநில மொழி ஊடகமும் இன்னும் அத்தகைய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரியவில்லை….. அது மட்டுமே கவலையாக இருக்கிறதே தவிர, என்னை அவர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை….
டெல்லி உயர்நீதிமன்றம் இ.பி.கோ 377வது சட்டத்திருத்தம் பற்றி ஓரின விரும்பிகளுக்கு  சாதகமான தீர்ப்பு வழங்கி இருந்தாலும், இன்னும் உச்சநீதி மன்றம் அது தொடர்பாக எந்த தீர்ப்பையும் சொல்லவில்லையே!…. உச்சநீதிமன்றத்தில் எத்தகைய தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

உண்மையில் டெல்லி உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பு என்பது வரவேற்க வேண்டிய ஒன்று…. ஆனால், இப்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் உச்சநீதிமன்றம் நிச்சயம் நமக்கு சாதகமான தீர்ப்பை வழங்காது என்றே நினைக்கிறேன்…. ஒரு விதத்தில், அதுவும் நல்லதுதான், எந்த விஷயமே போராடாமல் கிடைத்தால் அது முழுமையான வெற்றியாக இருக்காது…. ஓரின விரும்பிகள் விஷயத்திலும் போராடினால்தான் வெற்றி கிடைக்கும்… அந்த வெற்றியால் மட்டுமே இது அனைவரிடமும் இயல்பாக சென்றடையும் ஒன்றாக அமையும்….
சட்டத்தின் மூலம் மட்டுமே மாற்றுப்பாலினம் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை கொண்டுவந்துவிட முடியுமா?….

நிச்சயமாக முடியாது…… மக்கள் மனதில் மாற்றுப்பாலினம் மற்றும் மாற்றுப்பாலின ஒருங்கிணைப்பு பற்றிய தவறான எண்ணங்கள் ஆழமாக பதிந்திருக்கிறது… அத்தகைய எண்ணங்களை மாற்ற, ஒரு சட்டத்திருத்தம் போதாது…. சட்டம், அறிவியல், மருத்துவம், ஊடகங்கள், அரசு எந்திரம் என்று எல்லா துறைகளும் பல வழிகளிலும் இதைப்பற்றிய விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க முடியும்….. எல்லாம் ஒரே நாளில் நடக்கும்னு நான் சொல்லல, அதே நேரத்தில் எல்லாம் ஒருநாள் மாறும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு…..


பேசும் அத்தனை வார்த்தைகளிலும் நம்பிக்கை நிரம்பி காணப்பட்டது….. ஒவ்வொரு வார்த்தையிலும் ஒரு மௌன புரட்சியின் விதை புதைந்திருப்பதாக எனக்கு தோன்றியது…. “போராடாமல் கிடைப்பது வெற்றி இல்லை” அஞ்சலியின் இந்த வார்த்தைகள் என் மனதை ஊடுருவி சென்றுவிட்டதை உணர்ந்து, அவரிடமிருந்து விடைபெற்றேன்….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s